அடிதாங்க முடியாமல் தள்ளிவிட்ட மனைவி: கீழே விழுந்த குடிகார கணவன் உயிரிழப்பு
|சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான காவலாளியை படுகொலை செய்ததாக அவருடைய மனைவி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 44). சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக வேலை செய்தார். இவருடைய மனைவி கனகவள்ளி (34). வீட்டு வேலைக்கு செல்வார். 2 மகன்கள் உள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலகிருஷ்ணன், வேலை முடிந்தவுடன் தினமும் வீட்டிற்கு மதுக்குடித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால், கணவன் - மனைவி இடையே அவ்வப்போது சண்டை நிலவி வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த பாலகிருஷ்ணன் வழக்கம்போல மனைவி கனகவள்ளியிடம் சண்டை போட்டுள்ளார். மேலும், மனைவியை அடித்து உதைத்துள்ளார்.
அடி தாங்க முடியாமல் கனகவள்ளி, பாலகிருஷ்ணனை தள்ளி விட்டுள்ளார். அதில் பாலகிருஷ்ணனின் தலை சுவரில் பட்டு, காயம் அடைந்து கீழே சாய்ந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து வந்து பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கனகவள்ளி மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிப்பழக்கத்தால் குடும்பமே நிலைகுலைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.