< Back
மாநில செய்திகள்
கணவரை தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி கைது
மாநில செய்திகள்

கணவரை தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி கைது

தினத்தந்தி
|
24 Sept 2023 4:45 AM IST

வெங்கல் அருகே தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் கணவரை தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

தொழிலாளி மர்ம சாவு

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது வாணியன் சத்திரம் கிராமம். இங்கு வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி ரமேஷ் (வயது 30). இவரது மனைவி தங்கலட்சுமி (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ரமேஷ் கடந்த 11-ந்தேதி மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வெங்கல் போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது.

தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி

இதனால் ரமேஷ் மனைவி தங்கலட்சுமி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவரை பிடித்து போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தனது கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தினந்தோறும் என்னிடம் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் கணவர் ரமேஷ் தன்னிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரத்தில் அவர் தூங்கியபோது அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ததாக தங்கலட்சுமி தெரிவித்தார்.

போலீசார் தங்கலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர். பின்னர், அவரது உத்தரவின் பேரில் தங்கலட்சுமியை போலீசார் புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்