< Back
மாநில செய்திகள்
நள்ளிரவில் பரவலாக மழை;விவசாயிகள் மகிழ்ச்சி
விழுப்புரம்
மாநில செய்திகள்

நள்ளிரவில் பரவலாக மழை;விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
6 Oct 2023 6:45 PM GMT

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பரவலாக மழை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்னும் சில நாட்கள் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் நள்ளிரவு 12 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை நேற்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது.

மேலும் இந்த மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாதவாறு இருக்க நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இதேபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரும் மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதேபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்