< Back
மாநில செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
20 Sept 2023 1:54 AM IST

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்தது.

இதனால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 783 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று நீர்வரத்து 1,042 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்கு 705 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணை நீர்மட்டம் 62.90 அடியாக உள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 77.49 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.79 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 23 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை 36.10 அடி உயரம் கொண்டது. இந்த அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 34.25 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 14 கன அடியாகவும், வெளியேற்றம் 3 கன அடியாகவும் உள்ளது. இந்த அணை விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 47.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 55.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 32.81 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 93 அடியாகவும் உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- நெல்லை-3, பாளையங்கோட்டை-4, களக்காடு-1, நாங்குநேரி-3, சேர்வலாறு-2, பாபநாசம்-3, நாலுமுக்கு-10, ஊத்து-8. தென்காசி-20, ஆய்க்குடி-2, செங்கோட்டை-4, சிவகிரி-2, கடனாநதி-2, ராமநதி-2, கருப்பாநதி-8, குண்டாறு-22, அடவிநயினார்-6.

Related Tags :
மேலும் செய்திகள்