நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை
|நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். இரவு நேரங்களிலும் கடும் வெப்பம் நிலவி வந்தது. கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் நேற்று பாபநாசம் சேர்வலாறு அணைப்பகுதியிலும் மூலக்கரைப்பட்டி பகுதியிலும் லேசான மழை பெய்தது. இன்றும் அதிகாலை முதலே நெல்லை மாநகர பகுதிகளான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்ச நல்லூர், டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. அதன் பிறகு வெயில் அடித்தது.
நாங்குநேரி, மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி பகுதியில் காலை 8 மணி முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மதியம் 12 மணிக்கு பரவலாக மழை பெய்தது. இதேபோல நேற்று களக்காடு, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, சேர்வலாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரியில் 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டரும் மழை பதிவானது. மாஞ்சோலை, காக்காச்சி, பாபநாசம், மூலக்கரைப்பட்டி பகுதியில் தலா 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் இன்று காலை சுமார் 7.30 மணி முதல் 8 மணி வரை மழை பெய்தது. ஆறுமுகநேரி, காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதுடன் சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அரை மணி நேர மழையால் ஆறுமுகநேரி பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியிலும் இன்று காலை முதல் மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதை காணமுடிந்தது.