< Back
மாநில செய்திகள்
நெல்லையில் பரவலாக மழை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லையில் பரவலாக மழை

தினத்தந்தி
|
20 March 2023 9:19 PM GMT

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வள்ளியூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நெல்லை, பாளையங்கோட்டையில் திடீரென்று கோடை மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. மதியம் 2.30 மணி அளவில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் நெல்லையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதேபோல் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக வள்ளியூரில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதில் பொதுமக்கள் தத்தளித்தபடி சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றும் பணி நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- பாளையங்கோட்டை- 4, நெல்லை- 5, அம்பை- 8, சேரன்மாதேவி-1, மணிமுத்தாறு-3, நாங்குநேரி-4, பாபநாசம்-15.

மேலும் செய்திகள்