கன்னியாகுமரி
குமரியில் பரவலாக மழை:முள்ளங்கினாவிளையில் 12.8 மில்லி மீட்டர் பதிவு
|குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 12.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 12.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.
பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாகர்கோவில், மார்த்தாண்டம், குழித்துறை, களியல், பூதப்பாண்டி, தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. மலையோர பகுதியில் பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதுபோல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் வானில் கார்மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.
முள்ளங்கினாவிளையில் 12.8 மி.மீட்டர்
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 12.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதுபோல் பிற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி- 3.2, கன்னிமார்- 4.2, கொட்டாரம்- 2.6, நாகர்கோவில்- 7.2, மயிலாடி- 8.2, தக்கலை- 4.2, குளச்சல்- 3.2, இரணியல்- 3, மாம்பழத்துறையாறு- 6, ஆரல்வாய்மொழி- 3.6, ஆனைக்கிடங்கு- 4, முக்கடல் அணை- 3.2 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.
மலையோரம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால், அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 703 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 785 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 79 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 150 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.