கன்னியாகுமரி
குமரியில் பரவலாக மழை
|குமரியில் பரவலாக மழை, பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,045 கனஅடி நீர் வருகிறது
நாகா்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. நீர்பிடிப்பு மற்றும் மலையோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை லேசான வெயில் இருந்தது. மதியத்திற்கு பிறகு வானத்தில் கார்மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. ஆனால் மழை பெய்யவில்லை.
ஏற்கனவே சிற்றார் 1 மற்றும் சிற்றார் 2 ஆகிய அணைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 41.77 அடியாக உள்ளதால், 42 அடி எட்டும்போது வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தின் சில இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பூதப்பாண்டி- 4.2, கன்னிமார்- 2.4, குழித்துறை- 4, சுருளகோடு- 1.2, பாலமோர்- 1.6, மாம்பழத்துறையாறு-1, ஆனைக்கிடங்கு- 1.2, முக்கடல் அணை- 1.2 என மழை பதிவாகி இருந்தது. அதேசமயம் சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 72 கனஅடி நீர் வந்தது. சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 104 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 795 கனஅடி நீர் வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 257 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1045 கனஅடி நீர் வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 310 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 9 கனஅடி நீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 9.5 கனஅடி நீரும் வருகிறது.
-----