< Back
மாநில செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை  அதிகபட்சமாக காட்டுமயிலூரில் 80 மி.மீ. பதிவு
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக காட்டுமயிலூரில் 80 மி.மீ. பதிவு

தினத்தந்தி
|
26 Sep 2022 6:45 PM GMT

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக காட்டுமயிலூரில் 80 மி. மீ. மழை பதிவானது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். கோடை காலத்தை போல் வெயிலின் தாக்கம் இருந்ததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதி அடைந்து வந்தனர்.

இதற்கிடையில் தமிழக பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மழை

அதன்படி கடலூரில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் கன மழையாக கொட்டியது. பின்னர் காலை 5 மணி வரை விட்டு, விட்டு பெய்தது. அதன்பிறகு மழை இல்லை. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

இதேபோல் வேப்பூர், தொழுதூர், காட்டுமயிலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை அளவு

இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுமயிலூரில் 80 மி.மீ. மழை பதிவானது. குறைந்தபட்சமாக கொத்தவாச்சேரியில் 1 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 14.81 மி.மீ. மழை பெய்தது.

மேலும் செய்திகள்