< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லையில் பரவலாக மழை சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

தினத்தந்தி
|
1 Aug 2022 8:53 PM GMT

நெல்லையில் பரவலாக மழை பெய்தது. சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்

நெல்லையில் பரவலாக மழை பெய்தது. சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பரவலாக மழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்த கனமழையால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. தாமிரபரணி ஆற்றிலும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில் வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதியில் காலை முதல் மதியம் வரையில் வெயில் சுட்டெரித்த நிலையில், தொடர்ந்து மேகங்கள் திரண்டு மதியம் 12.20 மணியளவில் மழை பெய்தது.

சேறும், சகதியுமான சாலை

நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ½ மணி நேரம் மழை நீடித்தது. இதனால் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதி, சந்திப்பு மேம்பால பகுதி, பாலபாக்யா நகர், பாளையங்கோட்டை, பெருமாள்புரம், மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போன்று தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் போன்றவற்றுக்காக பல்வேறு சாலைகளிலும் குழிகள் தோண்டப்பட்டதால், பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. அவற்றில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால், அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து செல்வதுபோல் சென்றதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

சாலைகளை சீரமைக்க கோரிக்கை

நெல்லை சந்திப்பு பகுதியிலும் குண்டும் குழியுமான சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நெல்லை சந்திப்பு- மதுரை ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் சிந்துபூந்துறை வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் சுற்றிச் சென்றன. குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீவலப்பேரி பகுதியில் பெய்த மழையால், அங்கு நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

சேரன்மாதேவி-52, நாங்குநேரி-26, பாளையங்கோட்டை-17, நெல்லை-8, அம்பை-5, பாபநாசம்-5, மணிமுத்தாறு-2, ராதாபுரம்-6.

மேலும் செய்திகள்