பிரதமர் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் வை-பை இணைய சேவை
|கிராமப்புறங்களில் எளிதாக இணைய சேவையை 'வை-பை' மூலம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.
சென்னை,
நாடு முழுவதும் இணைய தள சேவை பயன்பாடு அதிகரித்து வருகிறது. செல்போன்களில் இணைய வசதியை பெறுவதால் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே நேரம் நகர்ப்புறங்களில் இணைய சேவையை பெறும் அளவுக்கு கிராமப்புறங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் வசிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை.
இந்த குறைபாட்டை தீர்க்கவும், கிராமப்புறங்களிலும் எளிதாக இணைய சேவையை 'வை-பை' மூலம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் மூலம் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 323 நியாய விலைக்கடைகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்து 27 கடைகள் பகுதி நேர கடைகளாக உள்ளன. 6,978 கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகிறது. 2 முதல் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒவ்வொரு கடையும் செயல்படுகிறது. இந்த கடைகளில் இருக்கும் இட வசதிகள், வாடகை கட்டிடம் என்றால் உரிமையாளரின் ஒப்புதலை பெறுவது, கடைகள் அமைந்திருக்கும் இடங்களின் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது கிராமப்புறங்களில் இணைய தளங்களின் வேகம் 50 முதல் 90 கிலோ பைட்சாகத்தான் உள்ளது. அரசின் வை-பை வசதி கிடைத்தால் இந்த வேகம் அதிகரிக்கும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கிராமப்புற மக்கள் ரேசன் கடைகளை இணைய தள மையங்களாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அரசு சேவை என்பதால் கட்டணமும் குறைவாக இருக்கும். ரேசன் கடைகளுக்கும் வருமானம் ஈட்டுவதாக அமையும்.