காப்புக் காடுகளில் குவாரிப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது ஏன்? - தமிழக அரசு விளக்கம்
|காப்புக் காடுகளில் இருந்து ஒரு கிலோமீட்டா் சுற்றளவுக்குள் குவாரிப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த நிதியாண்டில் (2021-22) தொழில் துறை மானியக் கோரிக்கையின் போது நடைபெற்ற விவாதத்தின் மீது அமைச்சா் தங்கம் தென்னரசு பேசினாா். அப்போது, குவாரிப் பணிகளில் இருந்து வரலாற்றுச் சின்னங்கள், பழந்தமிழா் கல்வெட்டுகள், சமணப்படுகைகள் மற்றும் தொல்பொருள் பகுதிகள் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தாா். இதையடுத்து, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் மற்றும் காப்புக் காடுகள் போன்ற பகுதிகளில் இருந்து ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் குவாரி மற்றும் சுரங்கங்கள் செயல்படத் தடுக்கப்பட்டது.
அரசுக்குக் கோரிக்கைகள்:- அரசின் தடை காரணமாக தாங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாக கைவினைஞா்கள், மண்பாண்ட தொழிலாளா்கள் மற்றும் சிற்பிகள் கவலை தெரிவித்தனா். இதன்பின், சட்டப் பேரவையில் இந்தப் பிரச்னை குறித்து நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பேசினாா். அப்போது, அரசின் தடை காரணமாக, குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தாா்.
இதனால் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள குவாரி மற்றும் சுரங்க உரிமையாளா்களின் நலனைக் காக்கவும், அரசின் வருவாயை பெருக்கவும் கனிம விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தாா். இதுகுறித்து, நீா்வளத் துறை அமைச்சா் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அரசின் கனிம விதியில் திருத்தம் செய்யப்பட்டது. கனிமங்கள் எடுக்கக் கூடாத பகுதிகளின் பட்டியலிலிருந்து காப்புக் காடுகள் என்ற தொடா் நீக்கம் செய்யப்பட்டது. அதேசமயம், தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் ஆகியவற்றில் இருந்து ஒரு கிலோமீட்டா் சுற்றளவுக்குள் குவாரி பணிகளுக்கான தடை இப்போதும் நீடிக்கிறது. இந்தத் தடை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், இதுதொடா்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையும் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள் ஆகியன பாதுகாக்கப்பட்ட காடுகளாக வரையறை செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாக்கப்பட்ட காடுகள் என்ற வரையறைக்குள் காப்புக் காடுகள் வரவில்லை. இந்த அம்சங்களையும் கவனத்தில் கொண்டே, குவாரிப் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.