விருதுநகர்
முறைகேடான குடிநீர் இணைப்புகளை அகற்றுவதில் தயக்கம் ஏன்?
|முறைகேடாக அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அகற்றுவதில் அதிகாரிகளுக்கு என்ன தயக்கம் என்று சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
சிவகாசி,
முறைகேடாக அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அகற்றுவதில் அதிகாரிகளுக்கு என்ன தயக்கம் என்று சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
மாநகராட்சி கூட்டம்
சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சங்கீதா இன்பம் தலைமை தாங்கினார். கமிஷனர் சங்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் கவுன்சிலர்கள் தீர்மானத்தின் மீது விவாதம் செய்தனர். அதன் விவரம் வருமாறு:-
ரவிசங்கர்: சாட்சியாபுரம், திருத்தங்கல் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர்: இதுகுறித்து கலெக்டரிடம் பேசி இருக்கிறேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். விரைவில் பணிகள் தொடங்கும்.
குடிநீர் இணைப்பு
ரவிசங்கர்:- மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல ஆயிரம் குடிநீர் இணைப்புகள் முறைகேடாக பெற்று பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை அகற்ற வேண்டும்.
ராஜேஷ்: முறைகேடாக பெற்று பயன்படுத்தப்பட்டு வரும் குடிநீர் இணைப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் ஏன் தயக்கம் காட்டி வருகிறார்கள்?. கடந்த 5 மாதங்களாக இப்பிரச்சினை குறித்து கவுன்சிலர்கள் பலரும் புகார் செய்து வருகிறோம். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரிபாஸ்கர்: மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் எந்த செயலையும் அதிகாரிகள் ஊக்கப்படுத்த கூடாது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
மவுன அஞ்சலி
கூட்டத்தில் மண்டல தலைவர் சேவுகன், கவுன்சிலர்கள் அசோக்குமார், மகேஸ்வரி, ஜான் முருகேசன், தனலட்சுமி காசி, தங்கபாண்டி செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
சிவகாசி மாநகராட்சியில் 48 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் நேற்று மாமன்ற கூட்ட அரங்கிற்கு 25 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். முன்னதாக சிவகாசி நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் அசன் பதுருதீன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேயர், கமிஷனர், கவுன்சிலர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.