< Back
மாநில செய்திகள்
ஆவின் பால் விலை உயர்வு ஏன்? அமைச்சர் விளக்கம்
மாநில செய்திகள்

ஆவின் பால் விலை உயர்வு ஏன்? அமைச்சர் விளக்கம்

தினத்தந்தி
|
5 Nov 2022 12:19 AM IST

ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது ஏன் என்பது குறித்து பால் வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தப்பட்டது.

பசும்பால் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35 ஆகி உள்ளது.

எருமைப்பால் கொள்முதல் விலையும் லிட்டருக்கு ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆகி உள்ளது.

இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்து விட்டது.

ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நிறைகொழுப்பு கொண்ட ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வின் பின்னணி என்ன என்பது குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது:-

பால் உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர்களின் நலன் கருதி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பால் விலை லிட்டர் ரூ.60 ஆகி உள்ளது. இந்த பாலை ஆவின் அட்டை மூலம் வாங்குவோருக்கு பழைய விலையிலேயே, அதாவது லிட்டர் ரூ.46 என்ற விலையிலேயே வழங்கப்படும். அட்டை இல்லாமல் சில்லரை விலையில் ரூ.48 விற்பனை செய்ததைத்தான் ரூ.60 என உயர்த்தி உள்ளோம். இந்த பாலை 11 லட்சம் பேர் வாங்குகிறார்கள்.

அவர்களில் 40 சதவீதத்தினர் அட்டை மூலமும், 60 சதவீதத்தினர் சில்லரை விற்பனை ரீதியிலும் வாங்குகின்றனர்.

அதே நேரத்தில் இந்த பால் குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும்கூட தனியார் நிறுவனங்களிலும் லிட்டர் ரூ.70-க்கு விற்பனை ஆகிறது.

விலை உயர்வு ஏன்?

ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லரை விற்பனை விலை உயர்வினால் கடைகளில் தேநீர், காபி விலையும் உயர்ந்து மக்களை பாதிக்குமே என்று கேட்டால், வரலாற்றில் இல்லாத வகையில் பாலுக்குக்கூட மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி போட்டுவிட்டது. அந்த சூழ்நிலையில்தான் விற்பனை விலை ஏறுகிறது.

ஏற்கனவே பாலின் விலையை ரூ.3 என்ற அளவுக்கு குறைத்து அரசு உத்தரவிட்டு இருந்தது. அந்த பாலுக்கான அந்த விலை தொடர்ந்து நீடிக்கும்.

பால் விலையை ரூ.3 குறைத்ததால் எங்களுக்கு ரூ.270 கோடி இழப்பு ஏற்படுகிறது. தற்போது கொள்முதல் விலையை உயர்த்தியதாலும் மாதமொன்றுக்கு ரூ.36 கோடி இழப்பு ஏற்படும். மொத்தமாக இழப்பை கணக்கிட்டால் ரூ.702 கோடி வரும்.

கொள்முதல் விலை ஏறினாலும், நிறை கொழுப்பு (ஆரஞ்சு பாக்கெட்) தவிர மற்ற பச்சை, நீல நிற பாக்கெட் பால் விற்பனை விலை உயர்த்தப்படவில்லை.

இவவாறு அவர் கூறினார்.

ஆவின் தீபாவளி இனிப்புகள் விற்பனை அதிகரிப்பு

சென்னை, நவ.5-

"தமிழ்நாட்டில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் தீபாவளி இனிப்புகள் ரூ.53 கோடி அளவுக்குத்தான் விற்பனை ஆகின. இதை தி.மு.க. ஆட்சியில் ரூ.85 கோடியாக அதிகரித்தோம். இந்த ஆண்டில் மற்ற இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டிபோட்டு மேற்கொண்ட விற்பனையில் ரூ.116.80 கோடி அளவுக்கு ஆவின் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன" என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

மேலும், ஆவின் டிலைட் பாலை குளிர்சாதன வசதியில்லாமல் சாதாரண தட்பவெப்ப நிலையில் வைத்திருந்து 90 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இதில் வேதிப்பொருட்கள் இருக்காது. இதை 'டெட்ரா பேக்' மூலம் சில வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். இங்கு பிளாஸ்டிக் கவரில் வழங்குகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்