வல்லுனர் குழு பரிந்துரைத்த பிறகும் ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தாமதிப்பது ஏன்? - ராமதாஸ்
|ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும் தமிழக அரசு தாமதிப்பது ஏன் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும் அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தமிழக அரசு தாமதிப்பது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 5 லட்சம் பணத்தை இழந்த வேதனையில் ராசிபுரம் அருகே சுரேஷ் என்ற பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சுரேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று கடந்த ஆண்டு இதே நாளில் தான் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்றிலிருந்து இன்று வரையிலான ஓராண்டில் 28 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் உயிரை இழந்திருக்கின்றனர்!
ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் கடிதம் தான் சாட்சியம். பணம் இருந்தால் 5 நிமிடம் கூட ஆன்லைன் ரம்மி ஆடாமல் இருக்க முடியவில்லை என்று இளைஞர் சுரேஷ் கடிதம் எழுதி வைத்திருக்கிறார்!
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும் அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தமிழக அரசு தாமதிப்பது ஏன்? இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டத்தை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்!" என்று கூறியுள்ளார்.