சிவகங்கை
இந்தியா கூட்டணியில் யாரும் செல்லாதபோது ஜி-20 மாநாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றது ஏன்?- சீமான் கேள்வி
|இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் யாரும் செல்லாத போது ஜி-20 மாநாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் ஏன் சென்றார் என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் யாரும் செல்லாத போது ஜி-20 மாநாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் ஏன் சென்றார் என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சனாதனம்
சிவகங்கையில் உள்ள தனியார் மகாலில் நடந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சனாதனத்தை ஒழிக்க தி.மு.க. மேற்கொண்ட நடவடிக்கை என்ன? முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், ஜெயலலிதா கூட சனாதனத்தை ஒழிக்க ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள் பிரதிநிதிகளுக்கு பதவி வழங்கி முயற்சி மேற்கொண்டனர். ஆனால் தி.மு.க. அதுபோல் முயற்சி மேற்கொண்டதா?
சனாதனம் என்பது பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பிரிப்பது. உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல் சனாதனம் என்பது ஒரு கிருமிதான். தி.மு.க. என்பதே சனாதன கட்சிதான். சனாதனத்தில் திளைத்து ஊறிய கட்சி தி.மு.க.தான். இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் யாரும் செல்லாதபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் ஜி-20 மாநாட்டிற்கு ஏன் சென்றார்? மகன் சனாதனத்தை எதிர்ப்பார். தந்தை சென்று மோடியிடம் சமாதானம் செய்வீர்கள். இதுதானே நடக்கிறது. சனாதனத்தின் தலைவரே மோடிதான். அவருடன் ஏன் சென்று நிற்கின்றீர்கள்.
புதிய கல்வி கொள்கை
வெள்ளைக்காரன் கொண்டுவந்த ஒவ்வொன்றாக மாற்றுவதாக கூறி இந்தியா பெயரை மாற்ற முயற்சிக்கிறீர்கள். சரி என வைத்துக்கொள்வோம். அதே வெள்ளைக்காரன் கொண்டுவந்த இந்துமதம் என்கிற பெயரை ஏன் மாற்றவில்லை?
இறை நம்பிக்கையுள்ள ஆட்சியை நடத்துபவர்கள் தீபாவளிக்கும், விநாயகர் சதுர்த்திக்கும் ஏன் வாழ்த்து சொல்வதில்லை. புதிய கல்வி கொள்கை என்பது நமது குழந்தைகளுக்கு எழுதி வைக்க கூடிய மரண சாசனம். குலக்கல்வி ஒழிப்பை மீண்டும் கொண்டு வருவதே புதிய கல்வி கொள்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.