< Back
மாநில செய்திகள்
சென்னையில் மின்தடை ஏன்? - மின் வாரியம் விளக்கம்
மாநில செய்திகள்

சென்னையில் மின்தடை ஏன்? - மின் வாரியம் விளக்கம்

தினத்தந்தி
|
13 Sept 2024 9:07 AM IST

சென்னையில் நள்ளிரவில் மின்சார விநியோகம் தடைபட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.

சென்னை,

மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது. மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் மின்சார விநியோகம் தடைபட்டதால் மக்கள் அவதி அடைந்தனர். தமிழ்நாடு மின்வாரியத்தின் சேவை மைய எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். பிரதான சாலைகள் அனைத்திலும் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் மின் தடைக்கான காரணம் குறித்து மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,

"அலமாதி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் மின் தடை ஏற்பட்டது. துணை மின் நிலையத்தில் மிகப்பெரிய தீ விபத்தும், ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது.

இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. வடசென்னை, கலிவேந்தம்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் மின்னூட்டிகளில் அதிக பளு காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்று மின் விநியோகம் வழங்கப்பட்டது.

மின் தடையால் மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மணலி, மயிலாப்பூர், வியாசர்பாடி, அடையாறு என சென்னை முழுவதும் 100 சதவீதம் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்