புதுக்கோட்டை
அரசு பல் மருத்துவக்கல்லூரியை திறக்காமல் இருப்பது ஏன்?
|பணிகள் முடிவடைந்தும் புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரியை திறக்காமல் இருப்பது ஏன்? என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு பிரிவு வார்டில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் நலம் விசாரித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அரசின் அறிக்கையில் 4,500 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் முகாம் நடத்துவதை வரவேற்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து ஆய்வு நடத்த வேண்டும்.
அரசு பல் மருத்துவக்கல்லூரி
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார செவிலியர்கள், டெங்கு பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட வேண்டும். டெங்கு கொசுப்புழு உற்பத்தியை அழித்தால் தான் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும். இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்படுத்த வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்கிற என்னை வசைப்பாடுகிறார்கள்.
மருத்துவர்கள், செவிலியர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படாமல் இருப்பது ஏன்? பணிகள் முடிவடைந்தும் புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரி திறக்கப்படாமல் இருப்பது ஏன்? புதுக்கோட்டையில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட புதிய பூங்கா இதுவரை திறக்கப்படாமல் இருப்பது ஏன்? இதற்கு பதில் சொல்லுங்கள். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணி மந்தமாக உள்ளது. பணிகளை வேகப்படுத்த வேண்டும்.
மாணவர் தற்கொலை சம்பவம்
டெங்குக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பாசிட்டிவ் இருந்தால் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். காய்ச்சல் கண்காணிப்பு முகாம்களை அதிகம் நடத்த வேண்டும். பணியாளர்களை அதிகமாக நியமித்து களத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியே பாதிப்புக்குள்ளாகும் போது இதில் அரசு இன்னும் கவனம் செலுத்தி சிறப்பாக துரிதமாக செயல்பட வேண்டும். கல்வித்துறையும் விமா்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. மாணவர்கள் தற்கொலை சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டையில் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்ததில் அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.