< Back
மாநில செய்திகள்
கிளாம்பாக்கத்தில்  திருச்சி  பஸ்கள் வர தாமதம் ஏன்?  போக்குவரத்து துறை விளக்கம்
மாநில செய்திகள்

கிளாம்பாக்கத்தில் திருச்சி பஸ்கள் வர தாமதம் ஏன்? போக்குவரத்து துறை விளக்கம்

தினத்தந்தி
|
10 Feb 2024 11:09 AM IST

மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக பேருந்துகள் கிளாம்பாக்கம் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்களும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரவில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சிக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். அத்துடன், கிளாம்பாக்கம் வரும் பேருந்துகளில் இருக்கைகள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் ஆத்திரம் அடைந்த பயணிகள், பேருந்துகளை சிறைபிடித்தனர்.

இதனை தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். எனினும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக பேருந்துகள் கிளாம்பாக்கம் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பேருந்துகள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வழக்கமாக திருச்சிக்கு இயக்கப்படும் 105 பேருந்துகளுடன், விடுமுறை காரணமாக கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட்டன. போக்குவரத்து சீரான நிலையில் தற்போது பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்