மதுரை
செந்தில் பாலாஜிக்காக மக்களை முதல்-அமைச்சர் பகைப்பது ஏன்?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி
|ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பகைப்பது ஏன்? என்று சட்டசபை எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்
ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பகைப்பது ஏன்? என்று சட்டசபை எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியாதாவது:-
மோதல் போக்கு
கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கான திட்டங்களை ஜெயலலிதா அரசு வழங்கியது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் திட்டங்களை அள்ளி, அள்ளி கொடுப்பவர்கள் என்று எதிர்பார்த்த மக்களுக்கு கானல் நீராக பகல் கனவாக போய்விட்டது. தாலிக்கு தங்க திட்டம், மடிக்கணினி திட்டம், அம்மா மினி கிளினிக், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், தற்போது அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்துவிட்டனர். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவார். மக்களுக்கு தி.மு.க.வால் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் மக்களுக்கு வழங்குவார். முதல்-அமைச்சருக்கு கவர்னரிடம் சண்டை போடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைப்பிடித்து தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை பெற்று தர முடியவில்லை.
தமிழக அரசு மக்களிடத்தில் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் 100 சதவீதம் தோல்வி அடைந்து உள்ளது. செந்தில்பாலாஜி அமைச்சராக இருப்பதால் அவரிடம் உரிய விசாரணை மேற்கொள்ள முடியவில்லை என்று அமலாக்கத்துறை கூறுகிறது. உடனே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டாமா?
மர்மம் என்ன?
கடந்த 1971, 1976-ம் ஆண்டுகளில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை கொள்முதல் செய்தலில் ரூ.5 லட்சம் ஊழல் செய்த வழக்கு இருந்தது. அந்த வழக்கில் தன்னை விடுவிக்க கருணாநிதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 5 பேர் நீதிபதிகள் கொண்ட விசாரணையில் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நான் பொது ஊழியர் வரன்முறைக்கு வராததால், இந்திய தண்டனைச் சட்டம் ஊழல் வழக்கிலிருந்து என் மீது வழக்கு தொடர முடியாது என கூறினார். ஆனால் நீதிபதிகள் அரசு கருவூலத்திலிருந்து சம்பளம் பெரும் முதல்-அமைச்சர் பொது ஊழியர் தான் என உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து முதல்-அமைச்சரை நியமனம் செய்யும் அதிகாரியாக கவர்னர் உள்ளார். அதுபோல் அவரை நீக்கவும் கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு அளித்தனர்.
இந்த தீர்ப்பை நேரம் இருந்தால் மு.க.ஸ்டாலின் படித்து பார்க்க வேண்டும். கடைசி புகலிடமாக தி.மு.க.வுக்கு வந்த செந்தில் பாலாஜியை காப்பதில் மர்மம் என்ன? ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்காக முதல்-அமைச்சர் ஏன் மக்களை, கவர்னர், மத்திய அரசை பகைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.