கைதாகியும் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி
|சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தானே என்று ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
சென்னை,
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில்பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஜாமீன் மனுவை ஆராய்ந்ததில் கடந்த முறை மறுத்த சூழல்கள் மாறியதாக தெரியவில்லை. கடைநிலை ஊழியர் கைதானால் 48 மணி நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்; ஆனால் 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜி அமைச்சராக இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்துக்கு சொல்கிறீர்கள்? என அரசுக்கு கேள்வி எழுப்பினார். மேலும் சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தானே என கூறினார்.
இதையடுத்து செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.