< Back
மாநில செய்திகள்
வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக கொடுக்கும் தமிழக அரசு...மக்கள் கூறுவது என்ன?

கோப்பு படம் (பிடிஐ)

மாநில செய்திகள்

வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக கொடுக்கும் தமிழக அரசு...மக்கள் கூறுவது என்ன?

தினத்தந்தி
|
10 Dec 2023 9:55 AM IST

கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பின்போது நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தது.

சென்னை,

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் பெருமழை பெய்தது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்தத்தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு இருந்தது. ஆனால் மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரத்தை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கனமழைக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் வேலை செய்யவில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ரேஷன் அட்டைதாரர்கள் பலர் வங்கி கணக்கை பராமரிக்கவில்லை. பலருக்கு வங்கிக்கணக்கு இல்லை. எனவேதான் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரத்தை ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் சென்னையில் வசித்து, பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரத்தை வழங்க அரசு பரிசீலனை செய்கிறது. ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் கிடைக்க வழிவகை செய்யப்படும். அதற்கான ஆதாரத்துடன் அவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விரிவான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். இவ்வாறு கூறினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வங்கிக்கணக்கை பராமரிக்காமல் 'ஜீரோ பாலன்ஸ்'ல் வைத்திருந்தால், நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்படும் நிலையில், அதன் ஒரு பகுதி வங்கிக்கு சென்றுவிடும். அதுபோல் வங்கிக்கடன் தவணைகளை செலுத்தாமல் விட்டிருந்தாலும் நிவாரணத் தொகை செலுத்தப்பட்ட உடனேயே வங்கியால் எடுக்கப்பட்டுவிடும். அந்தத் தொகை அவர்களுக்கு உடனடி பயனளிக்காமல் போய்விடக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்ட நபர்களின் கையில் கொடுத்துவிடுவதுதான் சிறந்தது என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் கூறினர்.

மேலும் செய்திகள்