'கச்சத்தீவு விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி
|கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமரிடம் கூறி முதலிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தி.மு.க., 10 ஆண்டுகாலமாக இதுகுறித்து பேசாமல் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. பேசி வருவது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளது. இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமரிடம் கூறி முதலிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
"தன்னை எல்லாம் தெரிந்தவர் என்றும், 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தவர் என்றும் சொல்லும் அண்ணாமலை கச்சத்தீவு பற்றி எப்படி படிக்காமல் இருந்தார்? தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி எப்படி தெரியாமல் இருந்தார்? இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தேவையா?
ஒருவர் மறைமுகமாக போனில் பேசியதை எடுக்க முடிந்த அண்ணாமலையால், கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமரிடம் கூறி முதலிலேயே ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்தது அண்ணாமலைக்கு தெரியாதா?
ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், எந்த வண்டி டெல்லிக்கு போகும், எது போகக்கூடாது என்று தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள்."
இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.