< Back
மாநில செய்திகள்
பா.ஜனதா பற்றி அறிக்கை விடாதது ஏன்..? - எடப்பாடி பழனிசாமி மீது சரமாரி கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு
மாநில செய்திகள்

"பா.ஜனதா பற்றி அறிக்கை விடாதது ஏன்..?" - எடப்பாடி பழனிசாமி மீது சரமாரி கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு

தினத்தந்தி
|
17 March 2024 10:56 PM IST

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

சென்னை,

லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் பியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக தி.மு.க. பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருந்தார். இதற்கு தி.மு.க. பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம். யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தான் வகித்த பொதுப்பணித்துறையில் ஒப்பந்தங்களை மொத்தமாகத் தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்துச் சிக்கிக் கொண்டவர் பழனிசாமி.

குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காகத் தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தவர் பழனிசாமி. சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறையினர் இவரது ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனை செய்தார்கள். டி.ஜி.பி.யே சிபிஐ விசாரணையில் சிக்கினார்.

தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், 'முதல்-அமைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்' என்று குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியவர் பழனிசாமி. கொடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள்.

இப்படிப்பட்ட நீண்டதொரு 'குற்றப்பட்டியல்' கொண்ட பழனிசாமி, இன்று விடுத்த அறிக்கையில், பாவத்தைப் பற்றியெல்லாம் பாலபாடம் எடுத்துள்ளார். திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி.

அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் கழக ஆட்சியில் தரப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான். பழனிசாமி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் தடைச் சட்டம் செல்லாது, அது சட்டப்பூர்வமானதாக இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு சொன்னபோது, சட்டப்பூர்வமான ஒரு சட்டத்தை உருவாக்கியது கழக அரசுதான்.

அந்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வந்தார் கவர்னர் ரவி. அவர் அதனைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பினோம். ஒப்புதலைப் பெற்றோம். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர்களைச் சந்தித்து பேசினார் கவர்னர். அப்போது கவர்னரைக் கண்டித்தாரா இந்த யோக்கியவான் பழனிசாமி? இப்போது ஏன் அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி?. தனது எஜமானர்களான பா.ஜ.க.வைக் காப்பற்றுவதற்காக அறிக்கை விடுகிறார்!

அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பணத்தைப் பறித்துள்ளது பா.ஜனதா. பா.ஜனதாவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பா.ஜனதாவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதன் மூலமாக, 'மிரட்டிப் பணம் பறிக்கும் பா.ஜனதா' என்று அகில இந்திய அளவில் பா.ஜனதா அம்பலப்பட்டுள்ளது.

பா.ஜனதாவால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இத்தகைய பா.ஜனதா பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா..?' பா.ஜனதாவுடன் கூட்டணியே கிடையாது' என்று சொல்லும் பழனிசாமிக்கு, பா.ஜனதாவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா..? ஏன் வாயை மூடிக் கொள்கிறார்? நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை 'டெண்டர் மோசடி' பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்களாம்! பழனிசாமி சொல்கிறார். அவர் கைக்கு அ.தி.மு.க. எப்போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதலபாதாளத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பவர் அவர்தான். சொரணையற்ற பழனிசாமிக்கு எத்தனை தடவைதான் மக்கள் பாடம் புகட்டுவார்கள்?

இவ்வாறு அதில் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்