எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? - த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா பதில்
|எடப்பாடி பழனிசாமியை த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா சேலத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
சென்னை,
மக்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இடையே நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. த.மா.கா. தலைவர் ஜி.கே வாசனை பா.ஜ.க தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசினார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து செயல்பட உள்ளது. பிரதமர் மோடியை வேட்பாளராக கொண்ட பா.ஜ.க.வில் அங்கம் வகிக்க த.மா.கா. முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.
த.மா.கா. - பா.ஜ.க. கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணியின் தலைவராக உள்ள யுவராஜா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று சந்தித்து பேசினார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு குறித்து யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2019 -ம் ஆண்டு முதல் த.மா.கா. அ.தி.மு.க. கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம் அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம்.
தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க வுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்கள். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமியை சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.