நடுரோட்டில் காதலியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது ஏன்..? கைதான எலக்ட்ரீசியன் பரபரப்பு வாக்குமூலம்
|சேலத்தில் நடுரோட்டில் காதலியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது ஏன்? என்பது குறித்து கைதான எலக்ட்ரீசியன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம்,
சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகணேஷ். இவருடைய மனைவி பிரியா (வயது 28). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகணேஷ் இறந்துவிட்டார். இதனால் பிரியா சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை பார்த்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.
அப்போது, வீராணம் அடுத்த டி.பெருமாபாளையத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் கோகுல் (23) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 2 மாதங்களாக கோகுலுடன் பிரியா சரிவர பேசவில்லை என தெரிகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டும் சரியாக பதில் கூறாமல் அவருடைய செல்போன் எண்ணையும், பிரியா பிளாக் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோகுல் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பிரியாணி கடையில் வேலை முடிந்து 4 ரோடு பகுதிக்கு பிரியா வந்து பஸ்சுக்காக காந்திருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கோகுல், காதலி பிரியாவிடம் தன்னிடம் உள்ள தொடர்பை ஏன் துண்டிக்கிறாய்? அல்லது வேறு ஒருவருடன் உனக்கு தொடர்பு இருக்கிறதா? என கேட்டு அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பிறகு ஆத்திரம் அடைந்த கோகுல் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளை எடுத்து நடுரோட்டில் பிரியாவை சரமாரியாக வெட்டினார். இதில், கழுத்து, தலையில் வெட்டு விழுந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கோகுலை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து பள்ளப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கோகுலை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். படுகாயம் அடைந்த பிரியா சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதலியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது ஏன்? என்பது குறித்து கைதான எலக்ட்ரீசியன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், "சேலம் 4 ரோட்டில் உள்ள பிரியாணி கடைக்கு அவ்வப்போது சாப்பிட செல்வேன். அப்போது, அங்கு வேலை செய்யும் பிரியாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரது கணவர் இறந்துவிட்டதாக என்னிடம் கூறினார். இதனால் அவர் மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்ள ஆசை பட்டேன்.
கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த சில மாதங்களாக என்னுடன் அவர் பேசுவதை தவிர்க்க தொடங்கினார். என்ன காரணம் என்று தெரியவில்லை. விசாரித்தபோது, வேறு ஒருவருடன் பிரியாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி அவரிடம் கேட்டு மிரட்டுவதற்காகவே அரிவாளுடன் சென்றேன். பின்னர் 4 ரோட்டில் நின்றிருந்த பிரியாவிடம் வேறு ஒருவருடன் உள்ள தொடர்பை கைவிடுமாறு மிரட்டினேன். அப்போது, அவர் அந்த நபருக்கு போன் செய்து கூப்பிட்டார்.
இதனால் ஆத்திரத்தில் கையில் இருந்த அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றேன். ஆனால் அவர் தப்பித்து விட்டார்" என்று போலீசாரிடம் கோகுல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கைதான எலக்ட்ரீசியன் கோகுல் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.