< Back
மாநில செய்திகள்
மரங்களை மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைக்க நவீன தொழில்நுட்பம் இருக்கும்போது ஏன் வெட்ட வேண்டும்? -  மதுரை ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

மரங்களை மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைக்க நவீன தொழில்நுட்பம் இருக்கும்போது ஏன் வெட்ட வேண்டும்? - மதுரை ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
5 Sept 2022 8:13 PM IST

மரங்களை மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைக்க நவீன தொழில்நுட்பம் இருக்கும்போது ஏன் வெட்ட வேண்டும்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை,

திருச்சியை சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி திருவனைக்கோவிலில் இருந்து சுங்கச்சாவடி சாலை வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் விரிவாக்கம் மற்றும் வடிகால், நடைபாதை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

திருவனைக்கோவில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை உள்ள பகுதியானது, முக்கிய சாலை கிடையாது. மேலும் இந்த சாலை 70 அடி அகல பாதையாகும். இந்த சாலையில் பெரிய வாகனங்கள் முதல் சிறிய வாகனங்கள் வரை செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையில் 40 ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. சாலை விரிவாக்கத்திற்கு இந்த மரங்களை வெட்டுவதால் காற்று மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே திருவனைக்கோவில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் நடைபாதை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கான தொழில்நுட்பம் தற்போது உள்ளன. அப்படி இருக்கும்போது மரங்களை ஏன் வெட்டுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கு குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

மேலும் செய்திகள்