சேலம்
மத்திய பாதுகாப்பு படைவீரர் தற்கொலை ஏன்?
|சேலம் இரும்பாலையில் மத்திய பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரும்பாலை:-
சேலம் இரும்பாலையில் மத்திய பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு படை வீரர் தற்கொலை
சேலம் இரும்பாலையில் மத்திய பாதுகாப்பு படை வீரர் ேதனி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல், பணியில் இருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவருடைய மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று உள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இருக்கலாம் எனவும், இதில் மனம் உடைந்து சக்திவேல் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
விடுமுறை பிரச்சினையா?
இந்தநிலையில் போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் மற்றும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது, ஊருக்கு சென்று வர சக்திவேல் விடுமுறை கேட்டு கடந்த 4-ந் தேதி ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்ததாக தெரிகிறது. அவருக்கு 2 நாட்களாக விடுமுறை தொடர்பான எந்த தகவலும் வரவில்லையாம். இதில் வேதனை அடைந்து அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனாலும் அவர் தற்கொலை செய்து கொண்ட அன்றுதான் (அதாவது 7-ந் தேதி) சக்திவேலுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே அவர் தற்கொலைக்கு விடுமுறை பிரச்சினை காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
போலீசார் திணறல்
தற்கொலை செய்து கொண்ட சக்திவேலின் செல்போன் எண்ணை கொண்டும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதாவது அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சக்திவேல் தற்கொலை செய்து இன்றுடன் 3 நாட்கள் ஆகிறது. அவர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் சக்திவேலின் சாவுக்கான காரணம் குறித்து முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் வெளியாகி வருவதால், தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.