அழகன்குளம் அகழாய்வு இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
|அழகன்குளத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பே அகழாய்வு நடத்தியும், அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யாதது ஏன் என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணையை சேர்ந்த தீரன் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழர் கட்சி மாநில செயலாளராக இருந்து, பல்வேறு பொதுநல சேவைகளில் ஈடுபட்டுள்ளேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் கிராமம் வைகை ஆறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் பகுதியாகும். சங்க காலத்தில் இந்த கிராமத்தில் இருந்துதான் கடல் வழி வணிகத்திற்காக பயன்படுத்தியுள்ளனர். இங்கு ஏற்கனவே நடந்த அகழாய்வில் ஏராளமான பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக, தமிழ் பிராமி எழுத்துகள், சோழ நாணயங்கள், வெளிநாட்டு வணிக ஆதாரங்கள் என பல்வேறு ஆதாரங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த அகழாய்வு பொருட்களை கார்பன் முறையில் சோதனை செய்ததில் அவை 2 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையவை என்பது தெரியவந்துள்ளது.
அழகன்குளம் கிராமத்தை அகழாய்வு செய்தவன் மூலம் பல்வேறு காலகட்டங்களில் இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பொருள்கள் கிடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு கட்டங்களில் அகழாய்வுகள் நடந்தன. சில அகழாய்வுகளில் முதல்கட்ட அறிக்கை வெளியானது.
அனைத்து அகழாய்வுகளின் இறுதி அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே அழகன்குளம் அகழாய்வு இறுதி அறிக்கை வெளியிட வேண்டும். அகழாய்வை தொடரவும், இங்கு ஏற்கனவே கிடைத்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அகழாய்வு தொடங்கி 30 வருடங்களாகியும் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
தமிழக அகழாய்வுத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வு தொடர்பாக முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
இதனையடுத்து நீதிபதிகள், ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வு குறித்த அறிக்கைகளை கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள். இந்த வழக்கு குறித்து தமிழக அகழாய்வுத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள்பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.