காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 இடங்கள் மட்டும் ஏன்? - திருமாவளவன் விளக்கம்
|2 இடங்கள் ஒரு இடமாக குறையவில்லை என்பதே வி.சி.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை,
மக்களவை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கமளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது;-
"இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் ஆண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. அன்றைக்கு மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ்தான் பிரித்து கொடுத்துக் கொண்டிருந்தது. இன்றைக்கு மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் வாங்கிக் கொண்டிருக்கிறது.
20 அல்லது 30 இடங்களில் போட்டியிடக் கூடிய கட்சி இன்று 10 இடங்களில்தான் போட்டியிடுகிறது. ஆனால், நாம் மேலே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கு சில சமூக சிக்கல்கள் உள்ளன. அதனால் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
2 இடங்கள் 3 இடங்களாக உயரவில்லை என்றாலும் கூட, ஒரு இடமாக குறையாமல் இருக்கிறது என்பதே நமது போராட்டத்திற்கு கிடைத்துள்ள் வெற்றி. கடந்த தேர்தலில் 24 இடங்களில் உதயசூரியன் சின்னம் களத்தில் இருந்தது. இந்த தேர்தலில் 22 இடங்களில்தான் இருக்கிறது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது."
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.