விண்ணுலகத்தில் யாருக்கு பசித்ததோ...இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக பதிவிட்ட ரசிகர்...!
|காலை முதலே கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் கட்டுங்கடங்காமல் திரண்டு வருகின்றனர்.
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் (வயது71) உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து காவலர்கள் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கேப்டன் விஜயகாந்த் உடல் வைக்கபட்டுள்ளது.
இந்நிலையில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காலை முதலே கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் கட்டுங்கடங்காமல் திரண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மதுரை அவனியாபுரத்தில் அவரது தீவிர ரசிகர்கள் மொட்டையடித்து அவருக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தியுள்ளனர். முன்னதாக அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள், பின்னர் மொட்டையடித்து தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.
விஜயகாந்த் மறைவால் தேமுதிக அலுவலகம் முன்பே திரண்டுள்ள பெண்கள் கதறி அழுதனர். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடத்திலும் தொண்டர்கள் கதறி அழுது வருகின்றனர்.
இந்தநிலையில், திரை பிரபலங்கள், வெளிநாட்டில் உள்ள ரசிகர்கள் தங்களது இரங்கல்களை ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் வழியாக தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், விஜயகாந்த் குறித்து தந்தி டிவியின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர் உருக்கமாக பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.
அதில், செய்திகளில் நீ இறந்துவிட்டதாக சொல்கிறார்கள், நாங்கள் உன்னை இழந்துவிட்டதாக சொல்கிறோம், விண் நோக்கி நீ விஜயம் செய்ய விண்ணுலகத்தில் யாருக்கு பசித்ததோ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.