ராமேசுவரம், மதுரை, திருவண்ணாமலை கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்
|ராமேசுவரம் ராமநாதசாமி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அன்னதான திட்டம்
இறையருள் பெற கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு அளிப்பதே அன்னதான திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் 754 கோவில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.
அந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் முதல்-அமைச்சர் கடந்த 2021 செப்டம்பர் 16-ந்தேதி திருச்செந்தூர் முருகன், சமயபுரம் மாரியம்மன், திருத்தணி முருகன் ஆகிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, 'நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ராமேசுவரம் ராமநாதசாமி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய 3 கோவில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
3 கோவில்களில்...
அதன்படி மேற்குறிப்பிட்ட 3 கோவில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் 3 கோவில்களில் நாளொன்றுக்கு சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்று பயன் அடைவார்கள்.
கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்பு சான்றிதழ் அனைத்து முதுநிலை கோவில்கள் உள்பட 314 கோவில்களுக்கு பெறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.