< Back
மாநில செய்திகள்
அறநிலையத்துறையே இருக்காது என்றால் கோவில்களை பராமரிப்பது யார்? அண்ணாமலைக்கு, அமைச்சர் சேகர்பாபு கேள்வி
மாநில செய்திகள்

அறநிலையத்துறையே இருக்காது என்றால் கோவில்களை பராமரிப்பது யார்? அண்ணாமலைக்கு, அமைச்சர் சேகர்பாபு கேள்வி

தினத்தந்தி
|
22 Jan 2023 5:38 AM IST

அறநிலையத்துறையே இருக்காது என்றால் கோவில்களை பராமரிப்பது யார்? என்று அண்ணாமலைக்கு, அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளி பல்லக்கு

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு உபயதாரரால் வழங்கப்பட்ட வெள்ளி பல்லக்கை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டு, பல்லக்கை தனது தோளில் சுமந்து வலம் வந்தார். இதேபோல இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரனும் பல்லக்கினை தூக்கிச்சென்றார்.

கோவில்களை பராமரிப்பது யார்?

பின்னர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையே இருக்காது என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அப்படியென்றால் கோவில்களை பராமரிப்பது யார்? கோவில் இருக்கக்கூடாது என்கிறாரா?. தெய்வங்களுக்கு நடக்கக்கூடிய பூஜைகள். புனஸ்காரங்கள் நடக்கக்கூடாது என்று பேசுகிறாரா என்று தெரியவில்லை.

அவர் எந்த குற்றச்சாட்டை சொன்னாலும், அதற்கு நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றோம். எங்களுக்கு மடியிலே கனமில்லை. அதனால் வழியிலே பயமில்லை.

அநாவசியமாக செலவு செய்யவில்லை

விமர்சனங்களை பற்றியும், குற்றச்சாட்டுகளை பற்றியும் கவலைப்பட வேண்டாம். குறைகள் என்றால் அதை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுங்கள். வேண்டும் என்று குறை கூறுபவர்களை எந்த காலத்திலும், எந்த வகையிலும் திருத்த முடியாது என்று முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.

கோவிலில் காணிக்கையாக பெற்ற பணத்தை செலவு செய்து தான் கூட்டம் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டுக்கு, எங்கு கூட்டம் நடைபெற்றது? என்று சுட்டிக்காட்ட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்திட்டங்கள் என்னென்ன வழி வகுத்திருக்கின்றதோ, எதற்கெல்லாம் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்களோ அந்த வழிமுறைகளின்படிதான் சட்டத்திட்டத்துக்கு உட்பட்டு தான் செலவுகளை செய்கிறோமே தவிர அநாவசியமாக எந்த செலவும் செய்யவில்லை.

ஆன்மிக புரட்சி ஆட்சி

இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து ஒரு உதவியாளரை கூட நான் பெறவில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் வாயிலாக இதுவரையில் ஒரு வாகனத்தை கூட என் சொந்த உபயோகத்திற்கோ, என் வீட்டு உபயோகத்திற்கோ பெறவில்லை. இறையன்பர்களிடமிருந்து காணிக்கையாக வரப்பெறுகின்ற சொத்துகளை இறை அன்பர்கள் மகிழ்ச்சி அடைகின்ற வகையிலும், அவர்கள் பயன்படக்கூடிய வகையிலும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு தான் செலவிடவேண்டும் என்று கண்டிப்போடு உத்தரவிட்டு இருக்கின்றார்.

அந்த உத்தரவின்படி, என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றதோ, அதன்படி தான் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆடம்பர, அநாவசியமான செலவுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளவில்லை.

எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு களவு போன 282 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது முதல்-அமைச்சரின் கையில் இருக்கின்ற காவல் துறையால் தான். தி.மு.க. தலைமையிலான ஆட்சியை ஆன்மிக புரட்சி ஆட்சி என்றே சொல்லலாம். உண்ணாவிரதம், அறப்போராட்டம் நடத்துபவர்கள் குறிப்பிட்டு எந்த குறையை எங்கள் மீது சுமத்தினாலும், சுட்டிக்காட்டினாலும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தி.மு.க. ஆட்சி தயாராக இருக்கிறது. எல்லா வகையிலும் புரட்சி ஏற்படுத்துகின்ற ஆட்சியை வேண்டும் என்று குறை செல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. மக்கள் மகிழ்ச்சியோடு இந்த ஆட்சியை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல இணை கமிஷனர் ரேணுகாதேவி, துணை கமிஷனர்கள் கவெனிதா, ஹரிஹரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்