தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற போவது யார் ? யார்?
|மத்தியில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மத்தியில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது. மீண்டும் மோடி தான் பிரதமர் ஆவார் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்தாலும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதி காட்டி வருகிறார்.
இதன் காரணமாக பல்வேறு சூழ்நிலைகளில் தேசிய ஜனநாய கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளை மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வர மோடி- அமித்ஷா- நட்டா தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி தான் பீகாரில் ஐக்கிய ஜனதாதளம், ஆந்திராவில் தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தப்பட்டு இருப்பதும் அந்த அடிப்படையில் தான் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதன்காரணமாக தமிழகத்தில் கூட்டணியை வலுப்படுத்த பா.ஜனதா இதர கட்சிகளை தன்பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
பா.ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட போவதாக, அதாவது பா.ஜனதா சின்னத்திலேயே போட்டியிட போவதாக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துவிட்டார். ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகியவை பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று தமிழ்மாநில காங்கிரஸ் அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஜி.கே. வாசனை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேசி உள்ளனர்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னையில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவகத்துக்கு இன்று சென்று நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பா.ஜனதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று அறிவித்து இருக்கிறார்.
அ.தி.மு.க. சார்பு ஓட்டுகளை கைப்பற்ற அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்க்க பா.ஜனதா தலைவர்கள் மறைமுக பேச்சு நடத்தி வந்தனர். ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படையாகவே பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். இதற்கிடையே மத்திய மந்திரிகள் கிஷன்ரெட்டி, வி.கே. சிங் ஆகியோர் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியை உறுதி செய்வதற்காக சென்னை வந்தனர். அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு நடத்தினார். அவர் பா.ஜனதா கூட்டணியில் சேருவது உறுதியாகி விட்டது.
அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தற்போது பா.ஜனதா வுடன் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. நிருபர்களிடம் பேட்டி அளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி.தினகரன், பா.ஜனதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். தன்னுடன் மத்திய மந்திரிகள் பேசியதாகவும், அவர்களிடம் தனது நிலையை தெரிவித்துள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
தற்போதுள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை என்ன என்பது வெளிப்படையாக தெரியவில்லை. பா.ஜனதாவுடன் பேசவில்லை என்று தே.மு.தி.க வெளிப்படையாக அறிவித்துவிட்டது. அந்த கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டது.