கன்னியாகுமரி
தக்கலை அருகேமாதா சொரூபத்தில் இருந்த7 பவுன் நகை கொள்ளை
|தக்கலை அருகே மாதா சொரூபத்தில் இருந்த 7 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தக்கலை:
தக்கலை அருகே மாதா சொரூபத்தில் இருந்த 7 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பரலோக மாதா ஆலயம்
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் ஆர்.சி.தெருவில் பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் அதிகாலையில் திறக்கப்பட்டு இரவில் பூட்டப்படுவது வழக்கம். அதே போல் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு ஆலய உறுப்பினர் இந்திரா ஆலயத்தை பூட்டி விட்டு சென்றார்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு அவர் ஆலய கதவை திறந்து உள்ளே சென்றார்.
7 பவுன் நகை கொள்ளை
அப்போது ஆலயத்தின் உள்ளே உள்ள மாதா சொரூபம் இருக்கும் கண்ணாடி கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் சென்று பார்த்த போது சொரூபத்தில் அணிவித்து இருந்த தங்க சங்கிலி, கைச்செயின் மற்றும் சுட்டி ஆகிய 7 பவுன் நகைகளை காணவில்லை.
இதுபற்றி இந்திரா ஊர் தலைவர் கிங்ஸ்லிக்கு தகவல் தெரிவித்தார். பிறகு தக்கலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்கள் கைவரிசை
விசாரணையில், நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆலயத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் ஆலயத்தின் பக்கவாட்டில் உள்ள கதவுகளை ஒவ்வொன்றாக தள்ளி பார்த்துள்ளனர். அந்த சமயம் வலதுபுறமுள்ள கதவின் உள்புறம் தாழ்பாள் போடாமல் இருந்ததால் வெளியில் இருந்து தள்ளியவுடன் திறந்துள்ளது.
பிறகு அந்த வழியாக உள்ளே சென்ற மர்மநபர்கள் மாதா சொரூபம் இருந்த கண்ணாடி கதவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.