< Back
மாநில செய்திகள்
குரூப்-4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் யார்? டி.என்.பி.எஸ்.சி. பட்டியல் வெளியீடு
மாநில செய்திகள்

குரூப்-4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் யார்? டி.என்.பி.எஸ்.சி. பட்டியல் வெளியீடு

தினத்தந்தி
|
7 April 2023 4:25 AM IST

குரூப்-4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்கள் யார்? என்ற பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

சென்னை,

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 10 ஆயிரத்து 117 காலி இடங்களுக்கான குரூப்-4 பதவிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி எழுத்துத் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 18 லட்சத்து 36 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போன நிலையில், தேர்வை எழுதிய தேர்வர்கள் விரக்தி அடைந்தனர்.

தேர்வு முடிவை விரைந்து வெளியிடக் கோரி சமூக வலைதளங்களில் தங்களுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு, குரூப்-4 பணிக்கான தேர்வு முடிவை கடந்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நேற்று வெளியிட்டு இருக்கிறது.

என்ன விகிதம்?

அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், கள உதவியாளர், பொருள் காப்பாளர், பில் கலெக்டர் போன்ற பதவிகளுக்கு 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்படுவதாக பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, 5 ஆயிரத்து 617 இடங்களுக்கு 11 ஆயிரத்து 252 பேர் தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், தட்டச்சர் பணியிடங்களை பொறுத்தவரையில், காலியாக உள்ள 4 ஆயிரத்து 500 இடங்களுக்கு, 1:2:5 என்ற விகித அடிப்படையில் 10 ஆயிரத்து 756 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதிவேற்றம் செய்யவேண்டும்

இவ்வாறு தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுடைய ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை இ-சேவை மையங்கள் மூலம் வருகிற 13-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 5-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் (டி.ஏ.சி.டி.வி.) மூலம் நடத்தப்படும் இ-சேவை மையங்கள் குறித்த பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பார்க்கலாம் என்றும், மேலும் தேர்வர்களின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு இருக்கிறது என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்