தேசிய விளையாட்டு போட்டிக்கான மாணவர்களின் பட்டியலை அனுப்பாதது யார்? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
|தேசிய விளையாட்டு போட்டிக்கான மாணவர்களின் பட்டியலை அனுப்பாதது யார்? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய மாணவர் விளையாட்டு அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் நீச்சல், கூடைப்பந்து, மல்யுத்தம் உள்ளிட்ட 32 விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களை தேர்வு செய்து அனுப்பும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. இதன்படி, நடப்பாண்டிற்கான விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 6-ந்தேதி ஆரம்பித்து 12-ந்தேதி முடிவடைய இருக்கிறது. இதன்மூலம், விளையாட்டிற்கான இடஒதுக்கீடு மூலம் மாணவ-மாணவியர் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளில் சேரமுடியும்.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொள்ளக்கூடிய மாணவர்களின் பட்டியலை அனுப்புமாறு இந்திய மாணவர் விளையாட்டு அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசு அனுப்பவில்லை என்றும், இதன் காரணமாக இந்த ஆண்டிற்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இதில் உள்ள உண்மைத் தன்மையை வெளிக்கொணரும் வகையில், தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பட்டியலை அனுப்புமாறு அகில இந்திய மாணவர் விளையாட்டு அமைப்பு எழுதிய கடிதத்தையும், அந்தக் கடிதம் யாருடைய மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தமிழ்நாடு அரசு வெளியிடவேண்டும் என்றும், இதுபோன்ற தவறு இனி வருங்காலங்களில் நிகழாது என்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.