< Back
மாநில செய்திகள்
துரைப்பாக்கம் அருகே சூட்கேசுக்குள் கட்டுக்கட்டாக வெள்ளை தாள்கள் - கள்ளநோட்டு அடிக்க முயற்சியா?
சென்னை
மாநில செய்திகள்

துரைப்பாக்கம் அருகே சூட்கேசுக்குள் கட்டுக்கட்டாக வெள்ளை தாள்கள் - கள்ளநோட்டு அடிக்க முயற்சியா?

தினத்தந்தி
|
4 Jun 2022 11:31 AM IST

துரைப்பாக்கம் அருகே சூட்கேசுக்குள் கட்டுக்கட்டாக வெள்ளை தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் கள்ளநோட்டுகள் அச்சடிக்க முயற்சியா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் ராஜீவ்நகர் சிக்னல் அருகே சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த கண்ணகிநகர் போலீசார், சூட்கேசை தூக்கி பார்த்தனர். அதிக கனமாக இருந்ததால் அதில் வெடிகுண்டு இருக்குமோ? என அச்சம் அடைந்தனர். இதுபற்றி வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சூட்கேசை பரிசோதித்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதியானது. பின்னர் சூட்கேசை திறந்து பார்த்தனர். அதன் உள்ளே இரும்பு லாக்கர் பெட்டி இருந்தது. அதனை உடைத்து பார்த்தபோது, அதற்குள் கட்டுக்கட்டாக 35 கட்டு வெள்ளை தாள்களும், 3 மை பாட்டில்களும் இருந்ததை கண்டனர்.

அதில் இருந்த வெள்ளை தாள்களும், மை பாட்டில்களும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த சூட்கேசை வீசி சென்றவர்கள் யார்? கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பலா? சென்னையில் கள்ளநோட்டுகள் அச்சடிக்க முயற்சியா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்