தஞ்சாவூர்
தஞ்சையில் வெளுத்து வாங்கிய மழை; வீதிக்கு வந்த சாக்கடை மண், குப்பைகள்
|தஞ்சையில் வெளுத்து வாங்கிய மழையால் சாக்கடை வாய்க்கால் நிரம்பி மண் மற்றும் குப்பைகளோடு கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து சென்ற பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தஞ்சையில் வெளுத்து வாங்கிய மழையால் சாக்கடை வாய்க்கால் நிரம்பி மண் மற்றும் குப்பைகளோடு கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து சென்ற பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திடீர் மழை
தமிழகத்தில் கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் சாலைகளில் நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இந்த நிலையில் இரவு ஒரு சில பகுதிகளில் லேசான தூறலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது.
வெளுத்து வாங்கியது
லேசான தூறலுடன்பெய்யத்தொடங்கிய மழை பின்னர் வெளுத்து வாங்கியது. குறிப்பாக கல்லணை, கும்பகோணம், பாபநசாம், அணைக்கரை, மஞ்சளாறு, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இந்த மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வரும் நிலையில் தற்போது மழை பெய்யத்தொடங்கி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இன்னும் தொடர்ந்து மழை பெய்தால் தான் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என தெரிவித்தனர்.
சாக்கடை மண், குப்பைகள்
தஞ்சையில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாக்கடை மண், அதில் தேங்கி இருந்த குப்பைகளும் மழைநீரோடு கலந்து வெளியேறியதுடன், சாக்கடை மண் சாலைகளில் படிந்தன. குறிப்பாக தஞ்சை மிஷன்சர்ச்ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளிலும் சாக்கடை மண் சாலையில் படிந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் நிலை காணப்பட்டது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
இதே போல் தஞ்சையை அடுத்த மேலவெளி ஊராட்சியில் விக்னேஸ்வராநகர் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளிலும் சாக்கடை நீர் அதில் தேங்கி இருந்த குப்பைகள் மழைநீருடன் வெளியேறி சாலையில் படிந்து காணப்பட்டன. இதனால் சாலை முழுவதும் குப்பைகள் தேங்கி காணப்பட்டன. இதனால் சாலையும் துர்நாற்றம் வீசியபடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.