காஞ்சிபுரம்
டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்பை சரிசெய்ய முயன்றபோதுமின்சாரம் தாக்கி விவசாயி சாவு
|டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்பை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் நடுப்பட்டு கிராமத்தைசேர்ந்தவர் வேணுகோபால் (வயது 65). விவசாயி. இவர் நேற்று காலை வயலுக்கு சென்று மின் மோட்டாரை இயக்க முயன்றார். மின்மோட்டாருக்கு மின்சாரம் வராததால் கம்பத்தில் பழுதடைந்து இருக்கும் என்று நினைத்து அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரை நிறுத்திவிட்டு மின் இணைப்பை சரி செய்ய முடிவு செய்து டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்சாரத்தை நிறுத்தி பழுது பார்க்க முயன்றார்.
அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததால் அவர் டிரான்ஸ்பார்மரில் இருந்து கீழே விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மானாமதி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.