திருவள்ளூர்
கந்து வட்டி கொடுமையால் கணவர் இறந்த நிலையில் விஷம் குடித்த மனைவியும் சிகிச்சை பலனின்றி சாவு
|கந்து வட்டி கொடுமையால் விஷம் குடித்து கணவர் இறந்த நிலையில், மனைவியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சாவிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரகாஷ் (48). இவரது மனைவி சரிதா (40). பிரகாஷ் சொந்தமாக ஒரு காரை வைத்து கொண்டு அதனை வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் கொரோனா காலகட்டத்தில் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்கிற முனுசாமியிடம் 10 வட்டிக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2 வருட காலமாக வட்டி கொடுத்து வந்த அவரிடம் தற்போது அசலும் வட்டியும் சேர்த்து ரூ.2 லட்சம் கேட்டு ரவுடிகளை வைத்து ராஜா மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், கடந்த 27-ஆம் தேதி ஆரம்பாக்கம் அடுத்த எளாவூரில் உள்ள ஏழுகண் பாலத்திற்கு தனது மனைவியுடன் சொந்த காரில் சென்றார். அங்கு நடு ரோட்டில் நின்றவாறு தனக்கு ஏற்பட்ட கந்து வட்டி பிரச்சினை குறித்து வீடியோ ஒன்றை செல்போனில் பதிவிட்டு அதனை நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டு இருவரும் விஷம் குடித்தனர்.
இதனையடுத்து நண்பர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் பிரகாஷ் இறந்தார். இந்த நிலையில் பிரகாசின் மனைவி சரிதாவும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் ராஜா மற்றும் நியாஸ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடிவருகின்றனர். மேலும் விசாரணையில் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்பு அக்கம்பக்கத்தினர் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு கோவிலுக்கு செல்வதாக கூறியதாகவும், கையில் எதையும் எடுத்து செல்லவில்லையே என்று கேட்டதற்கு போகும் போது எதை எடுத்து செல்ல போகிறோம் என மறைமுகமாக பதில் அளித்து சென்றது தெரிய வந்தது. இதற்கிடையே தம்பதியினரின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்களும், பொதுமக்களும் நேற்று ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். தற்கொலை செய்வதற்கு முன்பு சரிதா தனது வாட்ஸ்-அப்பில் 'மரணத்தை காட்டிலும் கொடுமையானது மனக்கவலை, மரணம் ஒருமுறை தான் கொல்லூம் ஆனால் மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்' என ஸ்டேட்டஸ் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.