சென்னை
மரத்தில் ஏறி விளையாடியபோது; மின்சாரம் தாக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி - மின் கம்பியை பிடித்ததால் பரிதாபம்
|ஊத்துக்கோட்டை அருகே மரத்தில் ஏறி விளையாடிய 5-ம் வகுப்பு மாணவன் மின் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பேடு காலனியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு நிஷா (16), நிதிஷா (12) என 2 மகள்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு நித்திஷ் (9) என்ற மகனும் இருந்தார். இவர், தண்டலத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று நித்திஷ் தனது நண்பர்களுடன் கயடை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் நித்திஷ் ஏறினார். அந்த மரத்தின் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மின்கம்பத்தில் இருந்து அங்கன்வாடி மையத்துக்கு செல்லும் மின் கம்பி அந்த மரக்கிளைகள் வழியாக செல்கிறது.
மரத்தில் ஏறிய நித்திஷ், எதிர்பாராதவிதமாக அந்த மின் கம்பியை பிடித்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் மரத்தில் இருந்து நித்திஷ் தூக்கி வீசப்பட்டார். அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நித்திசை மீட்டு பெரியபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நித்திஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.