< Back
மாநில செய்திகள்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... இன்று எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..?

கோப்புப்படம்

மாநில செய்திகள்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... இன்று எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..?

தினத்தந்தி
|
21 May 2024 5:04 AM IST

தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது,

சென்னை,

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்த நிலையில், தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல் திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல், நாளை (புதன்கிழமை) தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வருகிற 23-ந் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வருகிற 24-ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 24-ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், கேரள-கர்நாடக கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (புதன்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த தாழ்வு பகுதி, வருகிற 24-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் வருகிற 23-ந் தேதிக்குள் கரைக்கு திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

சிவப்பு எச்சரிக்கை வாபஸ்

தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஆனால், தற்போது, அந்த 4 மாவட்டங்களில், சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பைவிட குறைவாகும், இயல்பை ஒட்டியும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்