திருப்பூர்
மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு
|ஈரோட்டில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது.
ஈரோட்டில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் துறை கல்வி பயிலும் மாணவன் ஏ.ஜெயராமன் கலந்து கொண்டார். இந்த பளு தூக்கும் போட்டியில் கல்லூரி மாணவன் ஏ.ஜெயராமன் 50 கிலோ எடை பிரிவில் 150 கிலோ பளுதூக்கி முதலிடமும், 55 கிலோ எடை பிரிவில் 150 கிலோ பளுதூக்கி 4-ம் இடமும், இளங்கலை இளம் மாணவர் பிரிவில் 145 கிலோ பளுதூக்கி 6- ம் இடமும் பெற்று சாதனை படைத்தார்.
இதனை தொடர்ந்து மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சே.ப. நசீம் ஜான் தலைமை தாங்கி, மாணவன் ஏ.ஜெயராமனுக்கு பரிசு கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.