< Back
மாநில செய்திகள்
மதுரை மக்களிடம் வசூலித்த வரி எங்கே?
மதுரை
மாநில செய்திகள்

மதுரை மக்களிடம் வசூலித்த வரி எங்கே?

தினத்தந்தி
|
29 July 2023 2:15 AM IST

மதுரை மக்களிடம் வசூலிக்கும் வரி எங்கே செல்கிறது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

மதுரை

மதுரை மக்களிடம் வசூலிக்கும் வரி எங்கே செல்கிறது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

மணிப்பூர் கலவரம்

மதுரை மாநகராட்சி கூட்டம், அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. மேயர் இந்திராணி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியவுடன், மேயர் இந்திராணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கலைஞர் நூலகத்தை மதுரைக்கு அளித்து அதனை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை மக்கள் சார்பாகவும், மாமன்றம் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உள்ளாட்சி பிரநிதிகளின் உழைப்பை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்குகு மதிப்பூதியம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு இந்த மன்றம் கடமைப்பட்டு இருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தாத மத்திய அரசை மாமன்றம் கண்டிக்கிறது என்றார்.

ரூ.50 லட்சம் நிதி

வாசுகி (கிழக்கு மண்டல தலைவர்) : கிழக்கு மண்டலத்தில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு மாதந்தோறும் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு மக்களிடம் இருந்து வசூல் செய்து தருகிறோம். ஆனால் எங்களது மண்டலத்திற்கு கடந்த ஒன்றரை ஆண்டில் வெறும் ரூ.5 லட்சம் நிதி தான் கொடுத்து உள்ளனர். இது போதவில்லை. எங்களது மண்டலத்திற்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும். மண்டலத்திற்கு நிதி ஒதுக்காததால் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. அதனால், மண்டல கூட்டங்களையும் எங்களால் நடத்த முடியவில்லை.

சரவண புவனேஷ்வரி (வடக்கு மண்டல தலைவர்) : மக்களின் பிரச்சினைகளுக்கு பாடுப்பட்டு வரும் கவுன்சிலர்கள் பலருக்கு அவர்களது வார்டில் அலுவலகம் இல்லை. இதுகுறித்து பல முறை பேசியும் இன்னும் கட்டிடம் கட்ட வில்லை. மண்டல அளவில் உதவி பொறியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளனர். அதனால், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதமும் குறைந்து போய் விட்டது. மாநகராட்சி கல்வி விஷயத்தில் சிறப்பு கவனம் எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க. வாக்குவாதம்

சோலைராஜா (அ.தி.மு.க. எதிர்கட்சி தலைவர்):

கடந்த கூட்டத்தில் நான் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்கள் அனைத்தும் பொய்யான தகவல்களாக இருக்கிறது. பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் வருகிற நவம்பரில் நிறைவடையும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் கூறி இருக்கிறார். அவர் கூறியபடி இந்த திட்டம் முடிவடையுமா? என கேள்வி கேட்டால் அதற்கு அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தை குறிப்பிடாமல் பொருத்தமில்லாமல் பதில் அளித்துள்ளனர். மேலும், மாநகராட்சியில் வெறும் 39 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது என்று அதில் கூறியுள்ளனர். இது சரியான தகவலா? 100 முதல் 150 சதவீதம் வரை வரியை உயர்த்திவிட்டு மக்களுக்கான பிரச்சினைகளை மேற்கொண்ட கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. மக்களிடம் வாங்கும் பொது நிதியை என்ன செய்கிறீர்கள். மாநகராட்சி இதுவரை எவ்வளவு வரி வசூல் செய்துள்ளது. அந்த பொதுநிதியில் என்னென்ன பணிகள் நடந்துள்ளது என்ற வெள்ளை அறிக்கையை தர வேண்டும். (மற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்களும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.)

அதற்கு மேயர் இந்திராணி, உங்கள் ஆட்சியில் வெள்ளை அறிக்கை விட்டு உள்ளீர்களா? பணிகள் திட்டமிட்டப்படி முடிக்கப்பட்டு மக்களுக்கு பெரியாறு குடிநீர் வழங்கப்படும் என்றார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்