< Back
மாநில செய்திகள்
புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? - டி.டி.வி. தினகரன் கேள்வி

கோப்புப்படம்

மாநில செய்திகள்

புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? - டி.டி.வி. தினகரன் கேள்வி

தினத்தந்தி
|
26 Aug 2024 10:14 AM IST

நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தி உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை ஒதுக்கும் தி.மு.க அரசு, கடந்த மூன்றாண்டுகளில் 892 பேருந்துகள் மட்டுமே வாங்கியிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் ஆங்காங்கே பழுதாகி நிற்பதும், ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் பாகங்கள் கழண்டு விழுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், அப்பேருந்துகளில் பயணிக்கக் கூடிய பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அரசுப்போக்குவரத்துக் கழகங்களில் இயங்கிவரும் ஒட்டுமொத்த பேருந்துகளில் 50 சதவிகித பேருந்துகள் காலாவதியான நிலையில், அதனை சீரமைக்கவோ, புதிய பேருந்துகளை வாங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

2022-23 நிதிநிலை அறிக்கையில் 500 மின்சாரப் பேருந்துகளும், 2024 -25 நிதிநிலை அறிக்கையில் 500 மின்சாரப் பேருந்துகளும் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை ஒரு மின்சாரப் பேருந்தை கூட வாங்காதது ஏன் ? நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது ? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தொழிற்சங்கத்தினர் எழுப்பியுள்ளனர்.

எனவே, ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட போக்குவரத்துத்துறையில் நிகழும் நிர்வாக சீர்கேடுகளை களைவதோடு, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தி உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்