விருதுநகர்
பள்ளி வகுப்பறையில் பையை வைத்து விட்டு வெளியே சென்ற 3 மாணவர்கள் எங்கே?
|சிவகாசியில் பள்ளி வகுப்பறையில் பைைய வைத்து விட்டு வெளியே சென்ற மாணவர்கள் எங்கே என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர். பின்னர் தங்கள் பைகளை வகுப்பறையில் வைத்து விட்டு வெளியே சென்றவர்கள், மீண்டும் வகுப்பறைக்கு திரும்பவில்லை.மாணவர்கள் வகுப்பறையில் இல்லாததால் அதுகுறித்து வகுப்பு ஆசிரியர், பள்ளியின் முதல்வருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே 3 மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு விரைந்தனர்.
அவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டது. அதன் பேரில் விசாரிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் சிவகாசி டவுன் போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில் மாயமான மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் திடீர் மாயமான சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.