மதுரை
'எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்'- மதுரையில் டி.டி.வி. தினகரன் பேட்டி
|‘எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்’ என மதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார்.
டி.டி.வி.தினகரன் பேட்டி
மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சேர்வதில் 3 வாய்ப்புகள் உள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் அல்லது தனித்து போட்டியிடுவோம். தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம். தி.மு.க., பா.ஜ.க.வுக்கு பயந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலை முதல்-அமைச்சர் வேட்பாளர் என அறிவித்ததால், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முறிவு ஏற்பட்டதாக கூறும் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது.
ஆதரிப்பார்கள்
தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி செய்த ஊழல்கள், தவறுகளால் தி.மு.க.விற்கு வாக்களித்தார்கள். இன்று தி.மு.க.வுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதனால் தி.மு.க.வுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மாற்று சக்தியாக அ.ம.மு.க.வை மக்கள் ஆதரிப்பார்கள்.
தி.மு.க. அரசு வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றவில்லை. சட்டம்- ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. விலைவாசி இறக்கை கட்டி பறக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.
பழைய நண்பர்
ஆண்- பெண் சமம் என்ற சமூகநீதி, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா செயல்களால் தான் தமிழகம் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகநீதி உள்ள சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது.. தமிழகத்தில் சாதி, மத வேறுபாடுகளுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் எனது பழைய நண்பர். அவர் ஏதோ கோபத்தில் செய்தது, எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் நண்பர் என்ற முறையில் மீண்டும் இணைவது என்பது நாட்டில் நடப்பது தான். அவர் தனித்து முடிவு எடுப்பார். அ.ம.மு.க.- எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி செல்லக்கூடாது என 90 சதவீதம் பேர் விரும்புகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் கூட்டணி சேர்ந்தாலும், நாங்கள் சேர மாட்டோம், தனியாகவே போட்டியிடுவோம்.
சசிகலாவின் செயல்பாடு குறித்து அவரிடம் கேட்க வேண்டும். கர்நாடகாவில் வன்முறையை கையில் எடுப்பார்கள். தமிழக மக்கள் உரிமைக்காக சட்டரீதியாக போராடி பெறுவார்கள். கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்கள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.நாட்டின் ஒற்றுமைக்கும் நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.