< Back
மாநில செய்திகள்
அம்மா என்ற சொல்லை உச்சரிக்கும்போது... - எடப்பாடி பழனிசாமி அன்னையர் தின வாழ்த்துகள்
மாநில செய்திகள்

'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது... - எடப்பாடி பழனிசாமி அன்னையர் தின வாழ்த்துகள்

தினத்தந்தி
|
11 May 2024 8:14 AM GMT

அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது 'அன்னையர் தின' நல்வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

ஆயிரம் உறவுகள் வந்தாலும், தாய் அன்புக்கு ஈடாகாது. பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். 'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது.

தாய் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பிற்கு அளவே கிடையாது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தன் பிள்ளைகள் மீது அதிக பாசத்தையும், அன்பையும் கொண்டிருக்கும். அன்னை தனது பிள்ளைகள் மீதும், குடும்பத்தின் மீதும் வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பையும்; அவர்களின் ஒப்பற்ற பங்களிப்புகள் மற்றும் தன்னலமற்ற தியாகத்தையும் கொண்டாடுவதே அன்னையர் தினமாகும். இந்த நன்னாளில், அன்னையரின் ஆசீர்வாதங்களைப் பெறுவது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும்.

கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதைக் காட்டினாலும், அவர்கள் மீது அன்பை மட்டுமே செலுத்தும் அன்னையரை, வாழ்நாளெல்லாம் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் கருவில் இருந்தே கற்றுத் தருவது அம்மா தான். கனவு, ஆசை, லட்சியம் முதலானவற்றை துறந்து தன் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்பவர் அன்னை.

இத்தகைய போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்