அரியலூர்
விக்கிரவாண்டி- கும்பகோணம் 4 வழிச்சாலை பணிகள் நிறைவடைவது எப்போது?
|விக்கிரவாண்டி- கும்பகோணம் 4 வழிச்சாலை பணிகள் நிறைவடைவது எப்போது? என்று 4 மாவட்ட மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
4 வழிச்சாலை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 165 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், 4 வழிச்சாலையாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தியது. இதனைதொடர்ந்து திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, அதற்கான பணிகளை தொடங்க ரூ.1,200 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. அதன்பின்னர், விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடியை கூடுதலாக ஒதுக்கியது.
இதையடுத்து இச்சாலை 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. அதில், விக்கிரவாண்டியில் இருந்து கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, பின்னலூர் வரை 66 கி.மீ. தூரத்துக்கு ஒரு பகுதியாகவும், சேத்தியாத்தோப்பில் இருந்து சோழபுரம் வரை 51 கி.மீ. தூரத்துக்கு ஒரு பகுதியாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை வரை 48 கி.மீ. தூரத்துக்கு ஒரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
மேம்பாலங்கள், சுங்கச்சாவடிகள்
இதில் முதல் பகுதியில், கேடிலம், தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளின் குறுக்கே 26 பாலங்களும், 27 சாலை மேம்பாலங்களும், 3 ரெயில்வே மேம்பாலங்களும், 2 கனரக வாகன நிறுத்துமிடங்களும், பண்ருட்டி, வடலூர் ஆகிய பகுதிகளில் 2 புறவழிச்சாலைகளும், ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் பகுதியான சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் தாராசுரம் வரை அமைக்கப்பட்டு வரும் சாலையில் அரியலூர்-தஞ்சாவூர் மாவட்டங்களின் அணைக்கரை பாலம் உள்பட 34 பாலங்களும், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி, சோழத்தரம் உள்ளிட்ட பகுதிகளில் 23 மேம்பாலங்களும், ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டு வருகின்றன.
மூன்றாம் பகுதியான தாராசுரம் முதல் தஞ்சை மாரியம்மன் கோவில் புளியந்தோப்பு வரை அமைக்கப்பட்டு வரும் சாலையில், கும்பகோணத்தில் உள்ள காவிரி ஆறு, வடவாறு ஆகிய ஆறுகள் உள்பட 62 இடங்களில் ஆற்றுப்பாலங்களும், தாராசுரம் பகுதியில் ஒரு ரெயில்வே மேம்பாலமும், வளையப்பேட்டை, ராஜகிரி, திருக்கருகாவூர் ஆகிய பகுதிகள் உள்பட 20 இடங்களில் சாலை மேம்பாலங்களும், ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் 2020-ம் ஆண்டுக்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
குண்டும், குழியுமான சாலைகள்
கடந்த 2020-ம் ஆண்டு முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய சாலைப் பணிகள் தற்போது வரை மிகவும் மந்தமாக ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம், கோலியனூர், பஞ்சமாதேவி, சின்னக்கள்ளிப்பட்டு, அரியலூர் மாவட்டம் காடுவெட்டி, மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, அணைக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட மேம்பால பணிகள் முழுமைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இருபக்கமும் முழுமையாக சாலைகள் அமைக்காததால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மண் சாலையாகவே உள்ளன. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் புதிதாக போடப்பட்ட தார் சாலைகள் பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மின்விளக்கு வசதி இல்லாமல் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் இருக்கும் பள்ளம், மேடு தெரியாமல் தினசரி சாலையில் விபத்துகள் நிகழ்ந்து கொண்டு தான் வருகிறது. ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இச்சாலை விரிவாக்க பணியால் பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால்களும் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் பெய்த மழையின் போது, தண்ணீர் செல்ல வழியின்றி வயல்வெளிகளையும், குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்தது. இதுகுறித்து மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
ஆமை வேகத்தில் பணிகள்
கொளஞ்சி:- கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 4 வழிச்சாலைப் பணிகள் இதுவரை முழுமைப்பெறாமல் உள்ளன. ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திருச்சி-சிதம்பரம் 4 வழிச்சாலை பணிகள் முடிக்கப்பட்டு கடந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு சுங்கச்சாவடியில் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலை பணிகள் மட்டும் கடந்த 6 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் சாலைகள் முழுமைப் பெறாததால் முன்பை காட்டிலும் தற்போது தினமும் ஒரு விபத்து நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்த சாலையில், இரவு நேரங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பிரதான சாலையாக உள்ள இச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
உயிர் பலி
ராஜா பெரியசாமி:- கடந்த 6 ஆண்டுகளாக 4 வழிச்சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சில இடங்களில் தார் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் தினமும் விபத்துக்குள்ளாகி உயிர் பலியும் ஏற்படுகிறது. உடனடியாக 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மின்விளக்குகள் எரியவில்லை
ராஜ்:- தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மின்விளக்குகள் ஒரு சில இடங்களில் எரியவில்லை. மீன்சுருட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. மழை நீரை வெளியேற்ற போதுமான வடிகால் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணி கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதே வேகத்தில் நடைபெற்றால் இன்னும் 3 ஆண்டுகள் தேவைப்படும்.
திருச்சி-சிதம்பரம் 4 வழிச்சாலை பணிகள்
அருண நடேசன்:- வீரசோழபுரம், ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, மீன்சுருட்டி, மற்றும் காடுவெட்டி ஆகிய ஊர்களில் மேம்பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணி ஆரம்பித்த ஒரு ஆண்டிற்கு பின்னர் திருச்சி-சிதம்பரம் 4 வழிச்சாலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. திருச்சியில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தூரம். இதில் மீன்சுருட்டியில் இருந்து சுமார் 115 கிலோ மீட்டர் பணிகள் நிறைவடைந்து சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மீன்சுருட்டியில் இருந்து சிதம்பரம் வரை சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரெயில்வே மேம்பாலங்கள்
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தஞ்சாவூர்-விக்கிரவாண்டி இடையே உள்ள மொத்த தூரம் 165 கி.மீ ஆகும். இந்த 4 வழிச்சாலை அமைக்கும் இடங்கள் வழியாக வெள்ளியனூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, அரியலூர் மாவட்டம், காடுவெட்டி, மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, அணைக்கரை, தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் ஆகிய முக்கிய இடங்கள் உள்ளன. இச்சாலையின் குறுக்கே ஆறுகள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் செல்லும் 102 இடங்களிலும், சாலை பகுதிகளில் 70 இடங்களிலும் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதுதவிர 5 இடங்களில் ரெயில்வே மேம்பாலங்களும், 2 இடங்களில் புறவழி சாலைகளும், 3 இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும், என்றார்.
விக்கிரவாண்டி- கும்பகோணம் 4 வழிச்சாலை பணிகள் பல்வேறு இடங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே இச்சாலை பணிகளை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று 4 மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.